Sunday, March 20, 2011

Tamil Cinema News


“என் இசையை கேட்டு கண்ணீர் விடாவிட்டால் இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன்” – இளையராஜா





“அழகர்சாமியின் குதிரை படத்தின் இசை ஒரு புதிய அனுபவத்தைத் தரும். இந்த இசையைக் கேட்டு ஒரு சொட்டு கண்ணீர் விடாவிட்டால், நான் இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன்,” என்றார் இசைஞானி இளையராஜா ஆவேசமாக.
வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல படங்களைத் தந்த இயக்குநர் சுசீந்திரன், அடுத்த தரவிருக்கும் படம் ‘அழகர்சாமியின் குதிரை’.
‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் நடித்த அப்புக்குட்டி, சரண்யா மோகன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். இளையராஜா இசையமைத்துள்ளார். தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவீஸ் படத்தை வெளியிடுகிறது.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.
பொதுவாக எந்த பிரஸ்மீட்டிலும் பங்கேற்காத இளையராஜா நேற்று திடீரென்று பத்திரிகையாளர் சந்திப்பு வந்தார். மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு நிருபர்கள் மத்தியில் பேசினார்.
அவர் பேசுகையில், “என்னிடம் நிறைய இயக்குநர்கள் வந்து கதை சொல்கிறார்கள். எனக்கு கதை பிடிக்காவிட்டால், ‘என்னய்யா குப்பை கதையை சொல்றே?’ என்று நேராகவே கூறிவிடுவேன். குப்பையா கொட்டிக்கிட்டிருக்க வேண்டாமே…
ஆனால் இந்தப் படம் (அழகர்சாமியின் குதிரை) ஒரு முக்கியமான படம். இந்தப் படத்தின் மூலம் சில நல்ல விஷயங்களை இயக்குநர் சுசீந்திரன் கூறியிருக்கிறார்.
என் திறமையை காட்டுவதற்காக, இந்த படத்துக்கு இசையமைக்கவில்லை. நான் நன்றாக இசையமைத்து கொடுப்பேன் என்று ‘கேன்வாஸ்’ செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. கதை நல்லா இருந்தா, இசை தானா வந்துடும்.
கண்ணீர் விடாவிட்டால்…
‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் ‘டைட்டில் மியூசிக்’ செய்து முடித்துவிட்டுத்தான் இங்கே வந்தேன்.
இந்தப் படத்தை, குறிப்பா அந்த இசையைக் கேட்கும்போது தியேட்டர்களில் அனவரும் தங்கள் செல்போன்களை அணைத்துவிட்டு, கேளுங்கள். அதைக்கேட்டு ஒரு சொட்டு கண்ணீர் விடாவிட்டால், நான் இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன்… இசை உயிரோடு தொடர்புடையது. இந்த இசை அந்த உயிரில் கலக்கும். காரணம், இந்தப் படம் ஏற்படுத்தியுள்ள தாக்கம்.
நான், சினிமாவுக்கு வந்த போது இயக்குநர்களுக்குள் இவ்வளவு ஒற்றுமை இல்லை. பாலச்சந்தரை சந்திப்பதற்கு பாரதிராஜாவுக்கு எவ்வளவோ நாட்கள் காத்திருந்தார். பல விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளவே மாட்டார்கள். ஆனால், இப்போது இயக்குநர்களுக்குள் உள்ள ஒற்றுமை என்னை வியக்க வைத்துள்ளது.
ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்த காட்சிகள், தொழில்நுட்பம் பற்றியெல்லாம் அந்த மேடையில் பகிர்ந்து கொண்டதைப் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது.
தமிழ்நாட்டு கலைஞர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்களை இந்திய திரையுலகமே வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் நடித்த அப்புக்குட்டி, இசைவெளியீட்டு விழாவின்போது அரங்குக்குள் வந்தபோது, சூப்பர் ஸ்டாருக்குக் கிடைக்கும் அளவு கைத்தட்டல் கிடைத்தது. ஆனால் அதற்காக அவர் சூப்பர் ஸ்டார் ஆகிவிட முடியாது. அது ரஜினி மட்டும்தான். இந்தத் தெளிவு புதியவர்களுக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் தங்களுக்கான ஒரு இடத்தை சினிமாவில் பிடிக்க முடியும்.
சுசீந்திரன் ஒரு நல்ல இயக்குநர். அதனால்தான் அவர் நல்ல கதையை உள்வாங்கி, மிக அழுத்தமாக திரைக்கதை அமைத்திருக்கிறார். பல இயக்குநர்களிடம், படம் பார்க்கும்போதே சொல்வேன், இந்தக் காட்சி வேணாம்யா, நல்லா இல்லை என்று. ஆனால் அவர்கள் கேட்க மாட்டார்கள். இயக்குநர்கள் என்ற கர்வம் இருக்கத்தானே செய்யும். ஆனால் தியேட்டரில் ஆபரேட்டர் வெட்டி எறிந்த பிறகு வந்து சொல்வார்கள், ஆமாண்ணே, நீங்க சொன்னது சரிதான் என்று. அவர்கள் படத்துக்கு முதல் ரசிகன் நான்தானே… ஒரு ரசிகனின் கருத்தாக அதை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கும் நன்மை…
சுசீந்திரன் இதைப் புரிந்து கொண்டு இந்தப் படத்தை எடுத்துள்ளார். தமிழில் இந்த மாதிரிப் படங்கள் இனி அடிக்கடி வரவேண்டும்,” என்றார்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை அவர் சந்தித்ததால், அனைவரும் ஆர்வத்துடன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினர். இதனை பிஆர்ஓ நிகில் முருகன் அவரிடம் சொல்ல, அதுக்கென்ன எடுத்துக்கிட்டா போச்சு என்றவர், அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இயக்குநர் சுசீந்திரன், பட தயாரிப்பாளர் பி.மதன், கதை-வசனகர்த்தா பாஸ்கர் சக்தி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், நடிகர்கள் அப்புக்குட்டி, பிரபா, அழகன் தமிழ்மணி, கதாநாயகிகளில் ஒருவரான அத்வைதா ஆகியோரும் பேசினார்கள்.



No comments:

Post a Comment