Sunday, March 20, 2011

Tamil Cinema News


யாருக்கும் ‘வாய்ஸ்’ இல்லை! – ரஜினியின் முடிவு




       



இந்தத் தேர்தலில் எந்த அரசியல் கட்சியையோ, தலைவர்களையோ ஆதரித்து வாய்ஸ் கொடுக்கும் திட்டமில்லை. அதே நேரம் இவர்கள் யாருடைய ஆட்சி குறித்தும் திருப்தியான அபிப்பிராயமும் இல்லை என்று ரஜினி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சில தினங்களுக்கு முன் திடீரென்று ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் அரசியல் விமர்சகரும் ஜெயலலிதாவின் இப்போதைய ஆலோசகர் என்று வர்ணிக்கப்படுபவருமான சோ.
1 மணி நேரத்துக்கும் மேல் இருவரும் இன்றைய அரசியல் நிலவரங்களை அலசினர். பின்னர் இருவரும் வேறு ஒரு ரகசிய இடத்தில் சில மணி நேரங்கள் அரசியல் பேசியதாகத் தெரிகிறது. இந்த இருவருடனும், மூன்றாவது நபர் ஒருவர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவரைப் பற்றிய விவரங்களைக் கூற சோவும் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.
ரஜினி – சோ சந்திப்புக்கு காரணமே, திமுக கூட்டணியை ஆதரித்து ரஜினி பேசுவார் என செய்தி கசிந்ததுதானாம். இதனை தனது சந்திப்பின்போது குறிப்பிட்ட சோ, ‘எக்காரணம் கொண்டும் திமுகவை மட்டும் ஆதரிக்காதீர்கள். அதைவிட நீங்கள் மவுனமாக இருப்பதே சிறந்தது’ என்று கூறினாராம்.
ஆனால் ரஜினியோ, இப்போதைய சூழலில் எந்த கூட்டணியையும் ஆதரிக்கும் யோசனையே இல்லை. இரு கூட்டணியின் ஆட்சிகள் குறித்தும் எனக்கு திருப்தியான அபிப்பிராயமும் இல்லை, என சோவிடம் தீர்மானமாகக் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், “திமுகவை ஆதரிக்கிறேனா இல்லையா என்பது இருக்கட்டும். அதிமுகவை எதற்காக ஆதரிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா”, என்று ரஜினி கேட்டதாகவும், அதற்கு சோ நீண்ட விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
எப்படியோ, ரஜினியின் வாய்ஸ் இல்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டது என்ற நிம்மதியில் உள்ளதாம் அதிமுக தரப்பு!


No comments:

Post a Comment