Monday, December 20, 2010

என் நண்பனின் நினைவுகள்


My Friend in



Arulin கள்ளிப்பூ's Photos - கள்ளியின் நிழல்..

நீரும் நான்
நீரில் மூழ்கிய
ஊரும் நான்

காற்றும் நான்
காற்றால் சுழலும்
காத்தாடியும் நான்

நெருப்பும் நான்
நெருப்பாலெரியும்
காடும் நான்

பூமியும் நான்
பூமியில் துளிர்விடும்
விதைகளும் நான்

வானும் நான்
வானில் மின்னும்
நட்சத்திரமும் நான்

கடலும் நான்
கடலை நிரப்பும்
மேகமும் நான்

நீ படைத்த உலகத்தில்
எல்லாமே நான் தானே
என் இறைவா...!

எனக்கு தெரிந்த
கடவுள் நீ தானே
என் இறைவா...!

உனக்கு பெயர்
தாய் தானே
என் இறைவா. . . .





ஆடு மாடுக்கு
புல்லறுக்கணும்..
ஆத்தோர வயலுக்கு
தண்ணி பாய்ச்சனும்...
கெழக்க வந்த வயலுக்கு
களை எடுக்கணும்...

புருசனும் புள்ளையும்
அவுத்து போட்ட
அத்தனை துணியையும்
வாய்க்கால்ல தொவைக்கணும்...

அப்படியே
வார வழியில
சாய்பு கடைல
மிச்சர் புண்ணாக்கு வாங்கணும்
ஈனுன மாட்டுக்கு...!!

(இத்தனையும் செய்ய
ஒத்தையில
ஓலப்பெட்டியோட போறியே...
ஒத்தாசைக்கு நா வரவா...!! )

எம்மோ...!!
நானும் வரட்டுமா...!!

(மனசுக்குள்ள சொல்லிக்குவ...
என்ன பெத்த ராசா...!! )

வெளியில எதும் காட்டிக்காம...
வெரசடைய சொல்லிடுவ...

படிக்கிற புள்ள
ஊட்டுல இருக்குமா..!!
புல்லு புடுங்க வாரானாம்...!!
பாம்பும் கீரியும் கெடக்கும் அங்க
பூச்சி புல்லு கடிச்சுடும் உன்ன...

புத்திமதி சொல்லி
பொசுக்கு பொசுக்குனு
நடைய கட்டிடுவ...

ஏன் அம்மோ...!!
பூச்சியும் புல்லும் உன்னை கடிக்காதா...!!
பாம்பும் கீரியும் உன்னை தொடாதா..!!

நீ போ சொன்னாலும்...
பின்னாடியே வருவேன்....
உனக்கு தெரியாம...!!

நா...
உன்னை பெத்த ராசா...!!

அன்பு மகன்
அருள்...

எல்லோரும்
 நிற்க முயன்று விழும்போது...
 தூக்கிவிடுவார்கள்...
யாரவது ஒருத்தர்
யாரையும் ...
 நெருங்க விடமாட்டாய்...
 நான் தானாக
எழும் வரை...

எல்லோரும் 
 கைபிடித்து  நடக்கும் போது...
 என்னை மட்டும் 
னியாக நடக்கவைத்து...
 தூரத்தில் நின்று நீ
 கை தட்டுவாய்....

எல்லோரும்
 பை கட்டோடு பள்ளிப்பயணம்...
 எனக்கு மட்டும் 
 சைக்கிள் சவாரி...
 உன் இடுப்பை புடிச்சுகிட்டே...

எல்லோரையும் போல்
நானும் தவறு செய்ய....
தலையில் தட்டி அதட்டாமல்
கட்டியணைத்து சொன்னாய்...
தப்பு....
ஒரு தடவ பண்ணினா
தப்பு இல்ல...
அடுத்த தடவ பண்ணக்கூடாது...

எல்லோரையும் போல் 
எனக்கும் மீசை வந்துவிட்டது...
விளக்கெண்ணெய் தடவினவனை...
கையும் களவுமாக பிடித்து...

உன் ஷேவிங் கிரீம் தடவி...
சவரம் செய்த பின் சொன்னாய்...
வித்தியாசமா இருக்கனும்டா...!!!

என்னை அழகாக மட்டுமல்ல
அழகாக்கி பார்த்தவனும்
நீ மட்டும் தான்...

எனக்காக....
என்னென்ன செய்தாய் 
எண்ணிக்கையில் அடங்கவில்லை... 

உனக்காக...
நான் என்ன செய்தேன்...???
*அப்பன்* என்ற
பட்டத்துக்கு மட்டும்
காரணம் ஆனேன்...

ஏதாவது கேளுப்பா...!!
நான் செய்யுறேன்...

வயதாகி...
வெள்ளை முடி வந்த 
அப்பா சொன்னார்....

முதியோர் இல்லத்துக்கு 
அனுப்பிவிடாதடா...!!! 
 


 கைப்பிள்ளையோடு 
பஜார் பயணம்....
உன்னிடம்
வெறும்பையை கொடுத்துவிட்டு....

பிள்ளையை...
நான் ஏந்திக்கொண்டு 
நடக்கத்தொடன்கினோம்...

என்னை சுமப்பது போதாதா....
ஏழு கிலோ பிள்ளையையுமா....!!
ஏக்கத்தோடு பார்க்கும் 
உன் விழிகள்....

துறுதுறு என்று பேசிவந்தவள்...
பேச்சு ஏதுமின்றி...
நான் சொல்வதற்கெல்லாம்...
கட்டாய புன்னகையோடு
ஒரு பார்வை...

விழியை பார்த்த நேரத்தில்
இறங்கி இருந்த...
உன் தோள்பட்டையை பார்க்கவும்
தவறவில்லை நான்....

வெற்றுப்பை நிரம்பி இருக்கிறது...
ஒன்றுக்கு துணையாக
நான்கைந்து பைகள் சேர்ந்திருக்கிறது...
கேட்டாலும் தரமாட்ட....
கணக்கும் பைகளை...

குழந்தை அழுதுகொண்டே
கை நீட்ட....
பைகள் என்னிடம் கை மாற...
வீடு வந்து சேர்ந்தோம்...
நடந்தே....

படுக்கும் முன் 
தொட்டில் குழந்தையிடம்
மன்னிப்பு கேட்பதை 
நீ பார்க்க...

மெதுவாக சொன்னேன்
வேண்டுமென்றே பிள்ளையை
முள்ளிவிட்ட கதையை...

அழகான உருவம் அற்புதமாய்...
அலங்கரிக்கப்பட்டுள்ளது

அமெரிக்க இறக்குமதி
அவள் அணிந்திருக்கும்
மேலாடை..

கிழிஞ்சல்களில் தெரிகிறது..
பிறப்புறுப்பை தவிர...
மற்ற பாகங்கள்...
அவள் சதையோடு
ஒட்டி இருக்கும்
லெவிஸ் ஜீன்ஸ்....

பத்தாயிரம் ரூபாய்தானம்
தங்கக்கல் பதித்த..
அந்த ஜோடி செருப்புகள்...

ஒரு செட்டு கம்மல்
வெறும்
ஒரு மாத சம்பளம் தான்
உனக்கும் எனக்கும்

காசிருந்தால்
காலமும் நேரமும்
கை மணிக்கட்டில்
பிளாட்டின பட்டையில்
டைட்டன் வாட்ச்...

இரத்தங்கள் சுவைத்து
ஈரம் சொட்டும்
சிவந்த உதடு..

அவள் அங்கத்தை
அலங்கரிக்கும்
ஒவ்வொன்றும்
அவளின்
கடும் உழைப்பால்
கிடைத்தவைகலாம்...

அவள்...
உலகை இரசிக்கிறாளாம்...
தன் இஷ்டம் போல்
தன் வாழ்கை வாழ்கிறாளாம்...

அவளை கைதட்டி
வாழ்த்தி அனுப்பிவிட்டு
கடந்து சென்ற பின்
காரித்துப்பினேன்....
சுவரோர குப்பை மேல்...

அங்கம் அலங்கரிக்க
ஆடம்பரமாய் வாழ...
அங்கத்தையே விற்று
ஒரு வாழ்கை..

தூ.....!!

இதற்க்கு
அம்மணமாய் திரியும்
நாய் மேல்....



....
தீவாளி.... தீவாளி...
எல்லோர்க்கும் தீவாளி
எங்களுக்கு...!!??

எப்ப்ப்டின்னு கேக்குறியலா...!!

கார்தியளுக்காக
ஆத்தா பொறக்கியாந்த
சூந்து குச்சி தான்
மத்தாப்பு எங்களுக்கு...

வாழத்தடை நாரை
நல்லெண்ணயில முக்கி
சாட்டை வெடி கொளுத்துவோம்...

தீக்குச்சி
மண்டைய பிச்சி...
மெழுகு தாள்ல
மெல்ல பொதிஞ்சி....
ஒட்டாங்கன்னியால போடுவோம்
பொட்டு வெடி...

பப்பாளி குழாய...
துப்பாக்கியா மாத்தி...
எப்போதும் நிக்காம
வெடிச்சுகிட்டே இருக்கும்
ரோல் வெடி
எங்க வாய் வழியா....!!

அணுகுண்டு...
சரவெடி...
லெட்சுமி வெடி...
ராக்கெட்டு வெடி..
இதெல்லாம்...
எங்களுக்கும் கிடைக்கும்...

வெடி வாங்கித்தான்னு...
அப்பனாத்தாகிட்ட
கேட்டா....!!
முதுவுல வெடிக்கும்
திம்மு திம்முனு...

எல்லோர்க்கும்
தீவாளி அன்னைக்கே
திவாளி...
எங்களுக்கு
தீவாளிக்கு மறுநாள் தான்
உண்மைலே தீவாளி....

பட்டனு கொக்கி இல்லாத
காக்கி டவுசர்...
மேல் சட்டை இல்லன்னாலும்
மினு மினுக்கும்
கரி மருந்தால...

வெடிக்காம புழுத்து போன
வெடிகளை.. பிச்செடுத்து
கரி மருந்தை
தினத்தந்தி பேப்பர்ல போட்டு
நமத்துப்போன
தீக்குச்சியாள
கொளுத்தும்போது...

புஸ்வாணமா
எரியுது...
எங்க கலர் கலர் கனவுகள்...

தீவாளி தீவாளி....
எங்களுக்கும் தீவாளி...

___________________

500
ரூபாய் மேல்சட்டை மட்டும் வாங்கும்போது....
50
ரூபாய்க்கு ஒரு லுங்கியும் வாங்குங்க...
தினந்தோறும் கிழிஞ்ச வேஷ்டிய கட்டி நடந்துபோகும் முதியவருக்கு...

1000
ரூபாய்க்கு பட்டுபுடவை வாங்கும் போது...
100
ரூபாய்க்கு நைட்டி ஒன்னு வாங்குங்க..
மேல்சட்டையோட, நாடா இல்லாத பாவடைய முனிஞ்சிகிட்டு பூ விக்கிற சின்ன பொண்ணுக்கு...

தீபாவளி எல்லோரும் கொண்டாட...
ஊருக்கே படியளக்க வேண்டாம்...
ஒருத்தருக்காவது துணி வாங்கி கொடுக்கலாமே..)



கரடு முரடான கற்களை....
அழகாக அடுக்கி
அற்புதமான கோவிலாக...
மாற்றுவதுபோல்....!!

கூர்மையான முட்களை...
பந்தலில் குத்தி மறைத்து...
ஊர் வியக்க
கொட்டாரம் அமைப்பதுபோல்...

வண்ண வண்ண பீங்கான்கள்...!!
இதயத்தை கீறி....
இரத்தத்தை ருசிக்க தெரிந்த
வார்த்தை பீங்கான்கள்...!!

அத்தனையையும்
வலியோடு சேகரித்து...
சுகங்களை பசையாக சேர்த்து...!!
ஒட்டி ஒட்டி வைக்கிறேன்
வெள்ளை சுவற்றில்...
உருவம் கொடுத்து
உங்களிடம் அங்கீகாரம் பெற....

என் கவிதைகள்...
என் வலி சுகம்
இரண்டும் கலந்த
வர்ணம்..


என்ன...!!
காலங்காத்தாலே...
காக்கா கத்துது....

அக்கா...!!?
இன்னைக்கு.....
விருந்தாளி வருமா...!!
மாமா.. வருவாரா....!!

சொல்லாத பதிலுக்கு
நானே
விடை சேர்த்துக்கொண்டு
புத்தகப்பையை
ஊஞ்சலாக்கி
உற்காகமாக சென்றேன்...
பள்ளிக்கு...

சத்துணவு சாப்பாட்டில்
ஒரு உருண்டை
ஒட்டுமேல் இருக்கும்
காக்கைக்கு...

பள்ளி மணி சத்தம்
ஓயும்முன்...
வீடுவந்து சேர்ந்தேன்...
வில்லை விட்டு கிளம்பிய
அம்புபோல்....

வீடெல்லாம் தேடிய பின்
உணர்ந்தேன்...
இன்றும் ஏமாற்றமே....

கொல்லைப்புறம் வந்தேன்...
முருங்கை மர மேலிருந்து
எச்சமிட்ட காக்கைமேல்
எக்கச்சக்க கல்லெரிந்தும்
கோபம் அடங்கவில்லை...

பொய் சொல்லிப்போன
காக்கை மேல் மட்டுமல்ல..
அக்காவின் வாழ்கையை...
பொய்யாக்கிபோன....
மாமாவின் மேலும்தான்.....:

 

கோழியின் முட்டை
ஓர்...
உயிரென்று பார்ப்பதை விட

ஒரு வாய்
உணவேன்றே பார்க்கிறது...
பெரும்பாலான கண்கள்...

உடைத்தோ...
அவித்தோ...
பொரித்தோ....உண்டால்
ஒருவேளை உணவு மட்டும் தான்...

கொஞ்சம் பொறுத்திருந்தால்(சில நாட்கள்)

முட்டை சிறு குஞ்சாகி
குஞ்சு கோழியாகி...
கோழிகள் பெருக்கும்
இன்னும் பல கோழிகளை...!!

பொன்முட்டை மட்டும்
மதிப்புள்ளதல்ல...
முட்டைகள் கொண்டு வாங்கலாம்
பொன் பல...

நீ மட்டும்
அந்த ஒரு முட்டையை
அன்று அழிக்காமல் இருந்திருந்தால்
இன்று...
நீயும் ஒரு அந்தஸ்தன்...

குழந்தைகள்
நான் சொல்லும் முட்டைகள்
உங்கள் ஆசைக்காக
உடைத்துவிடாதீர்கள்...

பொறுத்திருந்து கவனியுங்கள்
தானாக வளர விடுங்கள்...

ஒரு முட்டைக்காக ஏங்குபவர்கலே....!!
மூட்டை மூட்டையாய்
கொண்டுவரும்
பணமும் புகழும்..
வளர விட்ட
நன்றி கடனுக்காக....

முட்டையை உணவாக பார்க்காதே
உயிராகவும் பார்...
பிள்ளையை உளவு மட்டும் பார்க்காதே
உன்னிப்பாகவும் பார்...

பிள்ளைகளை வளர்க்காதீர்
தானாக வளர விடுவீர்..



அப்பா....
உன் சுண்டு விரல்பிடித்து....
கடைவீதி போகணும்...
இறங்கி வா...!! ஒருமுறை

உன் காலிலே
ஊஞ்சலாடவேண்டும்...
இறங்கி வா...!! ஒருமுறை

உன் கைபட்டையை...
தேராக்கி...
பட்டத்து ராணியை
நகர்வலம் வரவேண்டும்.
இறங்கி வா...!! ஒருமுறை

உன் கால் விரல்களுக்கு
சொடேக்கெடுத்து...
பாராட்டு வாங்கவேண்டும்...
இறங்கி வா...!! ஒருமுறை

உன்னை பற்றி
அம்மா சொன்னதையெல்லாம்
உன் காதுகளில்
கிசுகிசுக்க வேண்டும்
இறங்கி வா...!! ஒருமுறை

அப்பனை ஆணை ஆக்கி..
அம்மாவை பாகனாக்கி
வீட்டுக்குள்ளே விளையாட
இறங்கி வா...!! ஒருமுறை

ஊரே திருவிழா..
அலங்கரித்த சப்பரம்
அழகான ஆடையில் நான்...
தோள்மேல் தாங்கு என்னை
சாமியை பார்க்கவேண்டும்
இறங்கி வா...!! ஒருமுறை

இடுப்பை
இறுக்க பிடித்துகொண்டு
பிறமுதுகில் கன்னம்
பதித்து...
சைக்கிளில் போகணும்
இறங்கி வா...!! ஒருமுறை

எங்கு போனாலும்
சொல்லிவிட்டு போவாயே...
என்னிடம் சொல்லாமல்
ஏங்க விட்டுவிட்டு
எங்கே போனாய்...!!!


உனக்கு முன்னமே...
தெரியும் தானே...!!
திரும்பி வரும் வழி
ஒருபோதும் இல்லையென்று...

ஒருமுறை சொல்லி இருக்க கூடாதா...!!
இந்த வழியே தான்
இழுத்துக்கொண்டு போவான்
எமன் என்று...!!

தொடர்ந்து வர
துணிந்தேன் எப்போதோ..!!
காற்றில்...
எங்கு தேடுவேன்...
எப்படி தேடுவேன்...
காணாமல் போன உன்
கால் தடங்களை....!!

இறங்கி வா...!! ஒருமுறை
இழுத்துக்கொண்டு போ....!!
என்னையும் உன்னிடமே...

இறங்கி வா...!! அப்பா...
ஒரே ஒருமுறை....!


உண்ணும் தட்டில்
தாளமிட்டதற்க்காக...
ஒரு நாள் முழுதும்
பட்டினி போடாமல் இருந்திருந்தால்

நானும் ஒரு சிவமணி தான் இன்று...!!

முகத்தை கூட
கழுவாமல்...
தெக்கு வீட்டு பாட்டி
செத்ததுக்கு ஆடியதை
ஊர் பார்க்க...
உதைக்காமல் இருந்தால்

நானும் ஒரு பிரபு தேவா தான் இன்று...!!

கோணக்கால் டீச்சரைப்போல்
நண்பர்கள் முன்
நடித்ததற்கு...
ஒரு நாள் முழுக்கும்
முட்டிபோடாமல் விட்டிருந்தால்...

நானும் ஒரு கமல்ஹாசன் தான் இன்று...!!

அழகான பெண்ணை
ஆபாசமாக வரைந்ததர்க்காக...
லத்தி பிய்யும் வரை
வெளுக்காமல் இருந்திருந்தால்...

நானும் ஒரு பிக்காஸோ தான் இன்று...!!

மட்டையடித்து விளையாடியவனை
தேடி தேடி
மைதானம் வந்து
மண்டையில் அடிக்காமல் இருந்திருந்தால்

நானும் ஒரு சச்சின் தான் இன்று...!!

ஓடாத ரேடியோவை
ஒரு வழியாய்
ஓடவைத்து....
ஒரே ஒரு சிறு தவறால்...
வீடே பீஸ் போனதை
ஒரு வீடு விடாமல்
சொல்லாமல் இருந்திருந்தால்....

நானும் ஒரு எடிசன் தான் இன்று...!!

இப்படி எனக்கும்
என் போன்ற பல பிள்ளைகளுக்கும்
கிடைக்காமல் போன
அங்கீகாரம் ஏராளம்....!!

அன்பும் அக்கறையும்
அளவில்லாமல் காட்ட தெரிந்த
அம்மா அப்பாவிற்கு...
அங்கீகரிக்கவும் உற்சாகப்படுத்தவும்
சரியாக தெரியவில்லை...!!

இலாபத்தை விட
நட்டம் வரக்கூடாதென்றே
வளர்துவிட்டார்கள்...!































No comments:

Post a Comment